திருவண்ணாமலை: கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதையொட்டி பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்கரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். சந்தோஷுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட சந்தோஷுக்கு தலைப்பாகை அணிவிக்கப்பட்டும், மாலை அணிவிக்கப்பட்டும் கேக் வெட்டுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கத்தியைத் தவிர்த்து, பட்டாக்கத்தியைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்ற கருத்து பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments